புத்துயிர் பெறாத கண்மாய் திட்டத்தால் பல லட்சம் வீணாகிறது! பணியை கண்காணிக்காததால் விவசாயிகள் வேதனை
சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்களின் கொள்ளளவை மீட்டெடுக்கவும், நிலத்தடி நீரை அதிகரிக்கவும் , சிறுபாசனக் கண்மாய்கள் புத்துயிர் திட்டத்தின் கீழ் 442 சிறு பாசன கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 12 ஒன்றியங்களில் கண்ணங்குடி தவிர மற்ற 11 ஒன்றியங்களில் 442 கண்மாய்களில் ரூ.34 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்தது. இதில் கல்லல் ஒன்றியத்தில் உள்ள 45 கண்மாய்கள் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடந்துள்ளது. கல்லல் ஒன்றியத்துக்குட்பட்ட பலவான்குடியில் உள்ள செங்கணி கண்மாய் ரூ.10. 68 லட்சம் மதிப்பீட்டிலும், திருமேனி கண்மாய் ரூ.9.54 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் நடந்தது. இதேபோல், ஆற்காடு ஊராட்சி, அரண்மனைபட்டி ஊராட்சிகளிலும் பணிகள் நடந்தது. இப்பணிகள் முழுமையாக நடைபெறாமல் பெயரளவிற்கு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கல்லல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சையது அபுதாஹிர் கூறுகையில்: பலவான்குடியில் செங்கணி கண்மாயில் முறையாக பணி நடைபெறவில்லை. கலெக்டரிடம் புகார் அளித்த பிறகே முறையாக பணி செய்தனர். விவசாயத்தின் ஆதாரமான கலுங்கு, மடைகள் பராமரிப்பின்றி உடைந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் சேமிக்க முடியாமல் வெளியேறிவிடுகிறது. கண்மாய்களை தூர்வாரியும் எந்த பயனும் இல்லை. தவிர,வெளூர் கண்மாயில் பாதியோடு வேலையை முடித்துவிட்டு சென்று விட்டனர். கிராம மக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் முழுமையாக பணியை முடித்தனர்.ஒவ்வொரு கண்மாய்க்கும் ரூ. 9 லட்சத்திற்கு மேல் தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ. 2 லட்சத்திற்கு கூட பணிகள் நடைபெறவில்லை. மாவட்ட அதிகாரிகள் பணி குறித்து முறையாக ஆய்வு நடத்த வேண்டும். கல்லல் யூனியன் பி.டி.ஏ., சோமதாஸ் கூறுகையில்: கண்மாய் பணியின் போது ஆயக்கட்டு மற்றும் விவசாயிகள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். அவர்கள் முன்னிலையில் பணிகள் முறையாக நடந்தது. இந்தத் திட்டத்தில், கலுங்குகளை பராமரிக்க முடியாது. அடுத்து வரக் கூடிய திட்டத்தில் முறையாக கலுங்கு, மடைகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் அப்பகுதியில் துார் வாரப்பட்ட கண்மாய்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.