மேலும் செய்திகள்
கால்நடை கணக்கெடுப்பு; விவசாயிகள் எதிர்பார்ப்பு
28-Nov-2024
இந்தியாவில் வேலை வாய்ப்பு, உணவு உற்பத்தி உள்ளிட்டவற்றில் கால்நடைகளின் தேவை முக்கியமானதாக கருதப்படுகிறது. பால், இறைச்சி உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது. எனவே, கால்நடை வளர்ப்பு என்பது இந்தியாவில் மிக முக்கிய பங்காற்றுகிறது.அதனை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்நடை கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணி வரும் பிப். 28ம் தேதி வரை நடைபெற உள்ளதாக கால்நடைத்துறை அறிவித்துள்ளது.நேரடியாக சென்று கால்நடைகளை கணக்கெடுக்கும் பணியில், 158 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், 33 மேற்பார்வையாளர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இக்கணக்கெடுப்பு பணியில் போதிய கணக்கெடுப்பாளர்கள் இல்லாததால், பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.மேலும், சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளின் எண்ணிக்கையையும், சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் மாடுகளின் எண்ணிக்கையும் முறையாக கணக்கிடப்படுவதில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: நாட்டின் முன்னேற்றத்திற்கு கால்நடைகள் வளர்ப்பு என்பது முக்கியமானதாகும். கால்நடைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில் போதிய ஆட்கள் இல்லாததால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பணிக்கு ஏற்ப போதிய ஆட்களை நியமிக்க வேண்டும். மேலும், கால்நடைகள் முறையாக பராமரிக்கப்படாமலும், பாதுகாக்கப்படாமலும் சாலைகளில் தினமும் உயிரிழக்கும் அவலம் நிலவுகிறது.கால்நடைகளை கணக்கெடுக்கும் கால்நடை பராமரிப்புத் துறையினர் அதன் இறப்பு சதவீதம் குறித்து முறையான தகவல் தருவதில்லை. இயற்கை இடர்பாடுகளில் உயிரிழக்கும் கால்நடை தான் கணக்கீடு செய்யப்படுகிறது. தினமும் சாலை விபத்தில் ஏராளமான மாடுகள் உயிரிழக்கின்றன.சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை முறையாக கணக்கெடுத்து அதனை கோசாலையில் அடைக்கும் பணிகள் ஈடுபட வேண்டும். அல்லது கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். இல்லையென்றால் கால்நடை கணக்கீடு செய்தும் பயனில்லை என்றனர்.
28-Nov-2024