பிள்ளையார்பட்டியில் திரியும் மாடுகளை அகற்ற கால்நடைத்துறை ஆய்வு
ஊராட்சிக்கு வழிமுறை அறிவிப்புதிருப்புத்துார்: பிள்ளையார்பட்டியில் ரோடுகளில் திரியும் மாடுகளால் பக்தர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க கால்நடைத்துறையினர் பிள்ளையார்பட்டி ஊராட்சிக்கு நடவடிக்கை எடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளனர்.பிள்ளையார்பட்டியில் கோயிலைச் சுற்றிலும் தேரோடும் ரோட்டில் மாடுகள் திரிவதால் பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். அண்மையில் மூதாட்டியை மாடுகள் முட்டியதில் காயமடைந்தார்.ரோடுகளில் மாடுகளின் நடமாட்டதை கட்டுப்படுத்த கோயில் நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு மனுச் செய்தனர்.மாவட்ட நிர்வாகம் 'திருப்புத்துார் பேரூராட்சியில் தெருக்களில் திரிந்த மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் பிள்ளையார்பட்டியில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க' காரைக்குடி கால்நடை உதவி இயக்குநர், திருப்புத்துார் கால்நடை மருத்துவமனை மருத்துவர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டது.இவர்கள் தந்த அறிக்கையின்படி கால்நடைத்துறை மண்ட இயக்குநர் பிள்ளையார்பட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு மாடுகளை அகற்ற அறிவுறுத்தியுள்ளனர்.அறிக்கையின் படி, திருப்புத்துாரில் திரிந்த மாடுகளை பிடிக்க 5 மாடு பிடி வீரர்கள் தினக்கூலியாக ரூ 700, மாடு பிடிக்க கயிறு ரூ.500, சரக்கு வாகன வாடகை ரூ.100 வீதம் செலவழித்து 14 மாடுகள் பிடிக்கப்பட்டு 'பவுண்டில்' அடைத்தனர். பின்னர் மாடு உரிமையாளர்களிடம் அபராதம் ரூ.2 ஆயிரம், பவுண்ட் கட்டணம் ரூ.1000 வசூலிக்கப்பட்டு 13 மாடுகள் ஒப்படைக்கப்பட்டன.அபராதம் செலுத்தப்படாத ஒரு மாட்டை பொது அறிவிப்பு செய்து ரூ.11,500க்கு ஏலமிடப்பட்டது.' இந்த வழிமுறைகளை பின்பற்றி பிள்ளையார்பட்டி ஊராட்சி நடவடிக்கை எடுக்க உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.