உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயில்வே கேட் மீது லாரி மோதல்: ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

ரயில்வே கேட் மீது லாரி மோதல்: ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாதுரை சிலை அருகே உள்ள ரயில்வே கேட்டை அடைக்கும் போது வேகமாக வந்த லாரி மோதியதால் அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரயில்கள் தாமதமானதால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.காரைக்குடியில் இருந்து விருதுநகர் செல்லும் பயணிகள் ரயில் நேற்றிரவு 7:00 மணிக்கு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனை நோக்கி கொன்னக்குளம் அருகே வந்தது. வைகை மேம்பாலத்தை தாண்டியுள்ள அண்ணாதுரை சிலை அருகே உள்ள ரயில்வே கேட்டை கீப்பர் அடைக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கனரக லாரி கேட்டை இறக்கும் போது மோதியதால் கேட் சேதமுற்று அதில் உள்ள மின்சார ஒயர்கள் அறுந்து தொங்கின.இதையடுத்து காரைக்குடியில் இருந்து வந்த பயணிகள் ரயில் கல்குறிச்சி ரயில்வே கேட் அருகே நிறுத்தப்பட்டது. மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஊழியர்கள் பழுது பார்க்கும் ரயில் பெட்டியில் வந்து கேட்டை பழுது நீக்கினர். இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக கல்குறிச்சி ரயில்வே கேட் அருகே ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதேபோல நேற்றிரவு 7:20 மணிக்கு சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். மானாமதுரை ஊருக்குள் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளும் ரயில்வே கேட் பழுதால் நீண்ட நேரம் காத்துக்கிடந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு பழுது சரி செய்யப்பட்ட பிறகு விருதுநகர் ரயில் மானாமதுரை ஸ்டேஷனுக்கு சென்றது. அதன் பிறகு சென்னை ரயில் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !