பழங்குடி மக்களுக்கு பரவும் நோய்க்கு குறைந்த செலவில் சிகிச்சை சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குனர் தகவல்
காரைக்குடி:பழங்குடி மக்களுக்கு பரவும் சிக்கிள் செல் அனிமீயா என்ற நோய்க்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க ஆய்வு நடந்து வருவதாக காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார். காரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர்., மத்திய மின் வேதியியல் ஆய்வக 78 வது நிறுவன நாள் கொண்டாடப்பட்டது. சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குனர் கலைச் செல்வி கூறியதாவது: இந்தியாவில் பழங்குடி மக்களிடையே பரவும் சிக்கிள் செல் அனிமீயா என்ற நோய், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிரா, பீஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள ஆக்சிஜன் குறைபாடு உடைய செல்களை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கான ஆய்வுகளை செய்து வருகிறோம். தற்போது ஒரு ரத்தத்துளியை வைத்து நோய் இருக்கிறதா இல்லையா, என 20 நிமிடங்களில் அறியக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளோம். இதற்கு பயன்படுத்தும் பி.சி.ஆர்., எனும் கருவி இ- மார்க்கெட் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் சில மாதங்களில் பரவலாக்கப்படும். இந்நோய், பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து, ஒரு ஜீனை வெளியே எடுத்து, அந்த ஜீனில் இருக்கின்ற ஆக்சிஜன் குறைபாட்டை சரி செய்து, மீண்டும் அதே ஜீனை அவரது உடலில் செலுத்த முயற்சி நடந்து வருகிறது. ஒருமுறை இந்த சிகிச்சை அளித்தால் ஆயுள் முழுவதும் மறு சிகிச்சை தேவைப்படாது. இதில், 90 சதவீத வெற்றி அடைந்து விட்டோம். இதே சிகிச்சையை, அமெரிக்காவில் செய்தால் ஒரு நோயாளிக்கு ரூ. 28 கோடி செலவாகும். இந்த சிகிச்சையை, நமது நாட்டில் ரூ.1 கோடியில் செய்யும் அளவிற்கு தொழில் நுட்பத்தை மேம்படுத்தி உள்ளோம். அடுத்த இலக்காக இதனை ரூ. 50 லட்சமாக குறைக்க முயற்சி செய்து வருகிறோம், என்றார்.