கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருடியவர் கைது
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே கடனை அடைக்க நண்பர் வீட்டில் திருடியவர் கைதானார். அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் வீட்டில் செப். 22 மதியம், யாரோ கதவை திறந்து 25 பவுன் நகையை திருடியுள்ளனர். சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள விநாயகர் கோயில் முன் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, வெளியாட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. அதே நேரம் சரவணனின் நண்பரான ஓசாரிபட்டியை சேர்ந்த முத்தையா மகன் சுபாஷ் 22, அடிக்கடி சரவணன் வீட்டுக்கு வந்து சென்றது தெரிந்தது. அவர் மேல் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தபோது, நகையை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். சுபாஷும், சரவணனும் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர், சுபாஷ் அடிக்கடி சரவணன் வீட்டுக்கு வந்து சென்ற போது, வீட்டில் எங்கே நகை, சாவிகளை வைத்துள்ளனர் என்பதை அறிந்திருந்தார். சுபாஷுக்கு கடன் சுமை இருந்ததால், அதை அடைக்க வேறு வழியின்றி நண்பரின் வீட்டிலேயே நகையை திருடியுள்ளார். போலீசார் விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரிந்தது. இதை தொடர்ந்து சிங்கம்புணரி இன்ஸ்பெக்டர் தயாளன், நகை திருடிய சுபாஷை கைது செய்து, அவரிடம் இருந்து 23 பவுன் நகையை மீட்டனர்.