மானாமதுரை வைகை ஆற்றில் ஓடும் கழிவுநீரால் பாதிப்பு l l விரைவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
மானாமதுரை நகரை பிரிக்கும் வகையில் வைகை ஆறு நகரின் குறுக்கே செல்கிறது. இரு புறங்களிலும் ஏராளமான வீடுகளும் வணிக நிறுவனங்களும் உள்ள நிலையில் இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் பெரும்பாலும் வைகை ஆற்றுக்குள் தான் விடப்படுகின்றன.ஆற்றுக்குள் எங்கு பார்த்தாலும் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.வைகை ஆற்றங்கரை முழுவதும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் வைகை ஆற்றுக்குள் செயல்படும் குடிநீர் திட்டங்களும் மாசடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர். வைகை ஆற்றுக்குள் கழிவு நீர் விடுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த வருடம் வைகை ஆற்றுக்குள் விடப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு புதிதாக மாங்குளம் ரோட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அரசு நிதி ஒதுக்கியதை தொடர்ந்து தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்த பிறகு வைகை ஆற்றுக்குள் விடப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று கழிவு நீரை சுத்தமான தண்ணீராக மாற்றி விவசாயத்திற்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.