உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கண்ணுக்கு எட்டியும் காதுக்கு எட்டாத அலைபேசி சேவை

கண்ணுக்கு எட்டியும் காதுக்கு எட்டாத அலைபேசி சேவை

எஸ்.புதுார்: எஸ்.புதுார் அருகே பல வருடங்களுக்குப் பிறகு அலைபேசி டவர் அமைத்தும் அதன் முழுப்பயன் கிடைக்கவில்லை. இதனால் அலைபேசிக்கு சிக்னல் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இப்பகுதி மக்கள் உள்ளனர். இவ்வொன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு, அதனைச் சுற்றியுள்ள கீழவண்ணாரிருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அலைபேசி சிக்னல் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். அவசர காலங்களில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலையங்களை தொடர்பு கொள்ள முடியாமலும், மாணவர்கள் ஆன்லைன் கல்வி படிக்க முடியாமலும் திணறினர். ஊராட்சி நிர்வாகம் ஆன்லைன் பணிகளை செய்ய முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டனர்.சில கி.மீ., தூரம் சென்று மலைப்பாதையில் அமர்ந்து தான் ஆன்லைன் தொடர்பான சேவைகளை இப்பகுதி மக்கள் பெற்று வந்தனர். இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியான நிலையில் கடந்தாண்டு மத்திய அரசு பரிந்துரைப்படி பி.எஸ்.என்.எல்., மூலம் டவர் அமைக்கப்பட்டது. ஆனால் சிக்னல் பிரச்னையால் முழு பயன் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த டவர் மூலம் 4ஜி சேவை கிடைத்தாலும், 2 ஜி போன்களை பயன்படுத்தக்கூட முடியாத நிலையில் உள்ளது. வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் டவரில் பழுது ஏற்பட்டு ஊழியர்கள் வந்து சரிசெய்த பின்பே மீண்டும் சிக்னல் கிடைக்கிறது.மேலும் பி.எஸ்.என்.எல்., தவிர தனியார் நெட்வொர்க் கிடைப்பதில்லை. பல வருடங்களுக்குப் பிறகு அலைபேசி டவர் கிடைத்தும் அதன் முழுப் பயன் கிடைக்காமல் மக்கள்தவிக்கின்றனர். இது குறித்து மேலவண்ணாரிருப்பு பித்தரைச்செல்வம் கூறியதாவது:இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பி.எஸ்.என்.எல், டவர்அமைத்து கொடுத்தது. பக்கத்து ஊர் டவர்களில் இருந்து சிக்னல் பெற்று இப்பகுதிக்கு நெட்வொர்க் தருகிறார்கள். இதனால் அடிக்கடி சிக்னல் பழுது ஏற்படுகிறது. இந்த டவரை நேரடியாக சாட்டிலைட் மூலமோ அல்லது பக்கத்து டவர்களில் இருந்து கேபிள் மூலமோ இணைத்து நெட்வொர்க்கை மேம்படுத்த வேண்டும். மேலும் அனைத்து தனியார் நெட்வொர்க்கும் இதே டவர் மூலம் செயல்படும் வகையில் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட வைக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ