துணை ராணுவப்படையில் தமிழக இளைஞர்களுக்கு அதிக ஒதுக்கீடு இலுப்பக்குடியில் டி.ஐ.ஜி., பேட்டி
சிவகங்கை:துணை ராணுவ படையில் தமிழக இளைஞர்களுக்கு அதிகளவில் ஒதுக்கீடு தரப்படுகிறது,'' என, சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் உள்ள இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீஸ் பயிற்சி மைய டி.ஐ.ஜி., ஜஸ்டின் ராபர்ட் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: வடகிழக்கு பிராந்தியத்தில் காரகோரம் கணவாய் முதல் ஜாசெப் லா வரையிலான 3,488 கி.மீ., துார நில எல்கையை இந்தோ- திபெத் எல்லை போலீஸ் பாதுகாப்பு படையினர் பாதுகாத்து வருகின்றனர். இதுதவிர சத்தீஸ்கர், மணிப்பூர், பஞ்சாப் போன்ற மாநில உட்பாதுகாப்பிலும் பயன்படுகின்றனர். தமிழகத்தில் இருந்து இன்னும் அதிகளவில் வீரர்கள் இந்த படையில் சேர வேண்டும் என்பதற்காக கூடுதலாக ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஜூலை 8 ல் சைக்கிள் பயணம்
ஆரோக்கியம் மற்றும் துாய்மையான இந்தியாவை'' உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இலுப்பக்குடியில் உள்ள பயிற்சி மையத்தை சேர்ந்த இரண்டு எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 23 வீரர்கள் சைக்கிளில் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் ஜூலை 8 காலை 7:00 மணிக்கு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை துவக்குகின்றனர். கடலோர பகுதி வழியாக சென்று ஜூலை 14ல் கன்னியாகுமரியில் இப்பயணம் நிறைவடையும். அன்று அதிகாலை விவேகானந்தர் பாறையில் யோகா நடத்தப்படும். சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி, இளைஞர்களை அதிகளவில் துணை ராணுவ படையில் சேர வைப்பது, போதைப்பொருள் உபயோகத்தை தவிர்க்க இப்பயணத்தில் வலியுறுத்தப்படும் என்றார்.