உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மர்ம நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

மர்ம நோயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

பூவந்தி: சிவகங்கை மாவட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதத்தில் மர்மநோய் தாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளதால் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு 17 ஆயிரத்து 231 வெள்ளாடு, 11 ஆயிரத்து 686 செம்மறியாடுகள் வளர்க்கப்படுகின்றன. பூவந்தி அருகே அரசனூர், திருமாஞ்சோலை, கிளாதரி, மீனாட்சிபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளாடு, செம்மறியாடு, கறவை மாடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.சில நாட்களாக ஆடுகளுக்கு நோய் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் தாக்கிய ஆடுகளின் கழுத்து மற்றும் காதின் பின்புறம் வீக்கம் காணப்படுகிறது. மறுநாளே வயிறு வீங்கி உணவு, தண்ணீர் எதுவும் எடுத்து கொள்ளாமல் உயிரிழந்து விடுகின்றன. தினசரி ஒவ்வொருவருக்கும் மூன்று , ஐந்து ஆடுகள் உயிரிழந்து வருவதால் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். லட்சுமிபுரத்தில் மட்டும் 300 ஆடுகள் வரை உயிரிழந்துள்ளன.கால்நடை வளர்க்கும் முத்துச்சாமி கூறியது: திடீரென கழுத்து, காதின் பின்புறம் வீக்கம் ஏற்பட்டு வயிறு வீங்குகிறது. பூவந்தி கால்நடை மருத்துவமனையில் மாத்திரை, மருந்து கொடுத்தனர். அதனை ஆடுகளுக்கு கொடுத்தாலும் காப்பாற்ற முடியவில்லை. தனியார் மருத்துவர்களிடம் மருந்து வாங்கியும் பயனில்லை, என்றார்.முத்துப்பிள்ளை கூறுகையில், எங்களுக்கு மட்டும் 72 ஆடுகள் உயிரிழந்துள்ளன. கொத்து கொத்தாக ஆடுகள் சாவதால் திகைத்து வருகிறோம். எங்களுக்கு தெரிந்த அனைத்து சிகிச்சையும் செய்தும் ஆடுகளை காப்பாற்ற முடியவில்லை, என்றார்.அய்யனார் கூறுகையில், கிளாதரி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகள் மாவட்டத்தின் கடைசியில் உள்ளன. பஸ் போக்குவரத்தே கிடையாது, ஷேர் ஆட்டோ, டூவீலர் தான். பெரும்பாலும் மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சென்று மருந்து வாங்கி ஆடுகளுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகளை 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கறவை மாடும் நோயால் உயிரிழந்துள்ளது. ஆடுகள் உயிரிழந்த நிலையில் குட்டிகளை பராமரிக்க முடியாமல் அதனையும் விற்பனை செய்வதால் பூவந்தி பகுதிகளில் ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை