சிங்கப்பூர் சென்று 3 ஆண்டாக வராத மகனிடம் தாய் பேசி இன்ப அதிர்ச்சி
சிவகங்கை : சிங்கப்பூர் சென்று திரும்பாத மகன் குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்த, 30 நிமிடத்திற்குள் அங்கிருந்த தன் மகனிடம் அலைபேசியில் தாய் பேசியது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் அருகே வலையபட்டி வெள்ளைக்கண்ணு மனைவி நாச்சம்மை. இவர் நேற்று காலை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் தன் மகன் பாலசுப்பிரமணியன் 29, சிங்கப்பூருக்கு கட்டட வேலைக்கு சென்று 3 ஆண்டு நிறைவடைந்த நிலையில், வீட்டிற்கும் வரவில்லை. தன்னிடமும் பேசவில்லை. அவர் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார் என தெரியவில்லை.அவரை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு எழுதி கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துகழுவனிடம் வழங்கினார். அம்மனு குறித்த விபரத்தை வெளிவிவகாரத்துறைக்கு பரிந்துரை செய்து, மகனை கண்டுபிடித்து தருவதாக நம்பிக்கை அளித்தார்.இதையறிந்த பத்திரிக்கையாளர் ஒருவர், சிங்கப்பூரில் பணிபுரியும் மானாமதுரையை சேர்ந்த தே.மு.தி.க., நகர் துணை செயலாளர் வசந்தபிரபுவிடம் பேசி விபரத்தை தெரிவித்தார். அவர் அங்குள்ள கம்பெனிகளில் தமிழகத்தில் இருந்து வேலைக்கு வந்த நபர் குறித்து விசாரித்து 30 நிமிடத்திற்குள் பாலசுப்பிரமணியன் இருக்கும் கம்பெனி மற்றும் அவரது அலைபேசி எண் விபரத்தை தெரிவித்துள்ளார்.இதையடுத்து பாலசுப்பிரமணியனின் அலைபேசி எண்ணில் அவரது தாய் நாச்சம்மை பேசியது. உறவினர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.