புதிய பணியிடம் உருவாக்கம் இல்லை; பணிச்சுமையால் டாக்டர்கள் குமுறல்
சிவகங்கை; தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மருத்துவமனைகள்,ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதியதாக மருத்துவ பணியிடங்களை உருவாக்காததால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் இருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். அரசு டாக்டர்கள் கூறுகையில், அரசு டாக்டர்களுக்கு 2017ல் இருந்து நிறைவேற்றப்படாத சம்பளம் மற்றும் பதவி உயர்வு சம்பந்தப்பட்ட அரசாணை 354 மறு சீராய்வு செய்ய வேண்டும். அலவன்ஸ் சம்பந்தப்பட்ட நடைமுறைபடுத்தப்படாத அரசாணை 293ல் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். புதிதாக திறக்கப்பட்ட சிறப்பு மருத்துவமனை, 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய பணியிடங்களை உருவாக்காமல் ஏற்கனவே உள்ள டாக்டர்களை பணியிட மாற்றம் செய்து நிரப்பப்பட்டுள்ளன. இதனால் அரசு டாக்டர்களுக்கு பனிச்சுமை அதிகரித்து, மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. எனவே புதிய மருத்துவ பணியிடங்களை உருவாக்க வேண்டும். அதேபோல் மருத்துவக் கல்லுாரியில் பணிபுரியும் இணை பேராசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வில் ஒரு வருடத்திற்கும் குறைவாக உள்ள ஸ்டேஷன் சீனியாரிட்டி உள்ள டாக்டர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற விதியை தளர்த்த வேண்டும். இணை பேராசிரியர்கள் கலந்தாய்விற்கு மீண்டும் பழைய முறையை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.