உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் மழை இல்லை ஆடிப்பட்டம் விதைப்பிற்கு தயக்கம்

திருப்புத்துாரில் மழை இல்லை ஆடிப்பட்டம் விதைப்பிற்கு தயக்கம்

திருப்புத்துார்: திருப்புத்துாரில் போதிய மழை இல்லாததால் ஆடிப்பட்டம் நெல் நாற்றங்கால் விதைப்பிற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. திருப்புத்துார் வட்டாரம் வானம் பார்த்த பூமி. கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்தாலும், திருப்புத்துார் பகுதியில் இரு மாதங்களாக சராசரியை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. இதனால் ஆடிப்பட்டம் நாற்றங்கால் விதைப்பிற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. அண்மை காலமாக 5 ஆயிரம் ஏக்கர் அளவிலேயே நெல் சாகுபடி நடைபெறுகிறது. அதில் 200 ஏக்கர் அளவிலேயே கிணறு, ஆழ்குழாய் பாசனத்தை பயன்படுத்தி சாகுபடி நடைபெறும். இளையாத்தங்குடி,திருக்களாப்பட்டி பகுதியில் சில விவசாயிகள் மட்டுமே நாற்றங்காலுக்கு விதைக்க தயாராகி வருகின்றனர். விவசாயிகள் கூறும்போது, அடுத்த நாட்களில் மழை பெய்தால் நன்றாக இருக்கும். இல்லாவிட்டால் வழக்கம் போல் ஆவணி 15க்கு பின் வயல்களில் 'தொழி நாற்று' ஆக நேரடி விதைப்பு தான் செய்வோம். பருவம் தப்பி மழை பெய்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது' என்றனர். ஆற்றுப்பாசனமும் கைகொடுப்பதில்லை, மழையும் பொய்த்து விடுகிறது. நிலத்தடி நீரும் சில இடங்களில் மட்டுமே உள்ளதால் 'ஆடிப்பட்டம்' என்பதே திருப்புத்துார் வட்டார விவசாயிகளிடம் கேள்விக்குறியாகி விட்டது. நிரந்தரப்பாசன வசதி ஏற்படுத்தும் வரை இது தொடரவே செய்யும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை