உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கட்டிக்குளத்தில் குடிநீர் பிரச்னைக்கு ஒருமாதமாக தீர்வு காணாத அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்

கட்டிக்குளத்தில் குடிநீர் பிரச்னைக்கு ஒருமாதமாக தீர்வு காணாத அதிகாரிகள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிக்குளம் ஊராட்சி அரியாண்டிபுரம் காலனி மக்களுக்கு 30 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து காலிகுடங்களுடன் வந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் கட்டிக்குளம் ஊராட்சியில் உள்ள அரியாண்டிபுரம் காலனியில் 30 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களுக்கு அரியாண்டிபுரத்தில் 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் மேல்நிலை தொட்டி அமைத்து, வீடுகள் தோறும் குழாய் அமைத்து வினியோகம் செய்து வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன் அரியாண்டிபுரத்தில் இருந்து கட்டிக்குளம் செல்லும் ரோட்டை புதுப்பிக்க தோண்டியபோது, குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இக்காலனி மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தொடர்ந்து அரியாண்டிபுரம் மக்கள் மானாமதுரை பி.டி.ஓ.,விடம் பல முறை புகார் செய்தும், 30 நாட்களாக இவர்களது அத்தியாவசிய பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண முயற்சி கூட எடுக்கவில்லை. இதில் அதிருப்தியான அரியாண்டிபுரம் காலனி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகத்திலும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வராததால், அரியாண்டிபுரம் காலனியில் வீடு தோறும் குடிநீர் வினியோகம் செய்யும் வரை இங்கிருந்து போகமாட்டோம் எனக்கூறி கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று மதியம் 2:00 மணி வரை போராட்டத்தை கைவிடவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அரியாண்டிபுரம் காலனிக்கு சென்று குழாய்களை சரி செய்து, குடிநீர் வழங்கிவிட்டதை உறுதி செய்த பின்னரே, கலைந்து சென்றனர்.நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கிராமத்தினர் அமைச்சர் காரை முற்றுகையிட முயற்சித்தனர். இதை தடுக்கும் விதமாக இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., சஜீவ் உட்பட எஸ்.பி., அதிரடிப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கிராமத்தில் இருந்து குடிநீர் வந்துவிட்டதாக தெரிவித்த பின்னரே போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ