உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரமனுாரில் தடுப்புச்சுவர் சேதம் தற்காலிகமாக சீரமைக்கும் அதிகாரிகள்

பிரமனுாரில் தடுப்புச்சுவர் சேதம் தற்காலிகமாக சீரமைக்கும் அதிகாரிகள்

திருப்புவனம்: திருப்புவனம் வழியாக செல்லும் பிரமனுார் கால்வாய் தடுப்புச்சுவரை மீண்டும் தற்காலிமாக சரி செய்யும் பணி தொடங்கியுள்ளது. தட்டான்குளம் தடுப்பணையில் இருந்து பிரமனுார் கண்மாய்க்கு 8 கி.மீ., துாரமுள்ள நீர்வரத்து கால்வாய் உள்ளது. பிரமனுார், வாவியரேந்தல் உள்ளிட்ட கண்மாய்களுக்கு இந்த கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. 750 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமனுார் கண்மாயை நம்பி ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பிரமனூர் கால்வாய் திருப்புவனம் நகர்ப்பகுதி வழியாக செல்கிறது. டிசம்பர் 8ல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது தண்ணீரின் வேகம் தாங்காமல் திதி பொட்டல் அருகே 50 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் தடுப்புச்சுவர் சேதமடைந்தது. தற்காலிகமாக மணல் மூடை அடுக்கி சுவர் எழுப்பி தண்ணீர் கொண்டு சென்றனர். நீர்வரத்து நின்ற பின் தடுப்புச்சுவர் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் சீரமைக்கப்படவில்லை. நவ. 2 முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டும் வேறு வழியின்றி மணல் மூடைகள் அடுக்கி தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் பொதுப்பணித்துறையினர், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கூறுகையில்: தற்போது பிரமனுார் கண்மாயில் உள்ள குறைந்த அளவு நீர் இருப்பு நாற்றங்கால் அமைக்க மட்டுமே வரும், முழு அளவில் விவசாயம் செய்ய கண்மாய் நிரம்பினால் மட்டுமே சாத்தியம், வினாடிக்கு இரண்டாயிரம் கன அடி வீதம் நவ.6ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கால்வாய் முழுவதும் ஈரமாக இருப்பதால் தண்ணீர் வேகமாக செல்ல வாய்ப்புள்ளது. எனவே தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி