மேலும் செய்திகள்
மஞ்சுவிரட்டுக்கு அனுமதி
08-Jan-2025
சிவகங்கை:சிவகங்கை அருகேயுள்ள கண்டுபட்டி பழைய அந்தோணியார் கோவில் தை பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் ஒருவர் பலியானார். 164 பேர் காயம் அடைந்தனர்.சிவகங்கை மாவட்டம் கண்டுபட்டியில் பழமை வாய்ந்த அந்தோணியார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தை 5ம் தேதி மஞ்சு விரட்டு நடப்பது வழக்கம். மஞ்சுவிரட்டை முன்னிட்டு மத வேறுபாடில்லாமல் அனைத்து மக்களும் நேர்த்திக்கடன் வைத்து அந்தோணியார் கோயில் முன் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தியும், கரும்புத்தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அந்தோணியார் கோயிலில் நடைபெறும் மஞ்சு விரட்டு, முதல் நாள் நடக்கும் பொங்கல் நிகழ்ச்சி என அனைத்து ஏற்பாடுகளையும் மத வேறுபாடில்லாமல் கிராம மக்கள் அனைவரும் செய்திருந்தனர்.இங்கு ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் கிராமத்தை சுற்றியுள்ள கண்மாய் மற்றும் பொட்டல் பகுதியில் நேற்று காலை 10:00 மணியில் இருந்தே காளைகள் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. 600க்கும் மேற்பட்ட காளைகளை மதியம் 2:00 மணி வரை அவிழ்த்து விட்டனர்.காளைகளை பிடிக்க நுாற்றுக்கணக்கான மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்கினர். மஞ்சுவிரட்டு முடிந்து மதியம் 3:00 மணிக்கு அந்தோணியார் கோயிலில் வழிபாடு, பூஜை முடித்து கோயில் காளை மற்றும் பதிவு செய்யப்பட்ட 137 காளைகள் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஆன்லைன் மூலம் 55 காளைகள் பதிவு செய்யப்பட்டதில் 4 காளைகள் நிராகரிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மஞ்சுவிரட்டை காண 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பம், குடும்பமாக கூடியிருந்தனர். மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டை காண வந்திருந்த அனைவரையும் கண்டுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து உணவளித்தனர். இந்த விருந்தில் அந்தோணியாருக்கு வேண்டுதலையொட்டி சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்டது. ஜல்லிக்கட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் ஆஷாஅஜித், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எஸ்.பி., ஆசிஸ் ராவத் தலைமையில் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பொட்டல் பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்த குன்றக்குடி அருகே கொரட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் 70, மாடு முட்டியதில் பலியானார். 164 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டது. 48 பேருக்கு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
08-Jan-2025