நிரம்பி வழியும் தடுப்பணைகள் விவசாயிகள் மகிழ்ச்சி
திருப்புவனம்: வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் பாசன தேவைக்காக தட்டான்குளம், தி.புதுார், லாடனேந்தல்,உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. தடுப்பணைகளின் இருபுறமும் ஷட்டர்கள் அமைக்கப்பட்டு வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வருவதால் வைகை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.திருப்புவனம் பகுதி வைகை ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ள படுகை அணைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. படுகை அணையின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பிரமனூர் கண்மாயை நம்பி ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கண்மாய்க்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திருப்புவனம் புதுார் வைகை ஆற்றுப்படுகையில் 47 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கானூர் படுகை அணை மூலம் முதுவன்திடல், வாவியரேந்தல், கொத்தன்குளம், பழையனூர் உள்ளிட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. பழையனூர் கால்வாயில் தண்ணீர் செல்வதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.