உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பருவமழை தாமதத்தால் நெல் விளைச்சல் குறைகிறது! திருப்புத்துாரில் மூன்று ஆண்டுக்கு பின் பாதிப்பு

பருவமழை தாமதத்தால் நெல் விளைச்சல் குறைகிறது! திருப்புத்துாரில் மூன்று ஆண்டுக்கு பின் பாதிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தாமதமான பருவமழையால் நெல்சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்பகுதியில் இந்த ஆண்டு விளைச்சல் வெகுவாக குறையும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.விவசாயப் பாதிப்பால் விவசாயிகள் கூலி வேலைக்கு செல்லத் துவங்கியுள்ளனர். திருப்புத்துார் தாலுகா வானம் பார்த்த பூமி. அண்டை மாவட்டங்களில் மழையின்மையால் மணிமுத்தாறு, பாலாறு, விருசுழியாறுகளிலும் நீர் வரத்து இல்லை. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தாலும் திருப்புத்துார் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக சராசரியை விட குறைவாகவே மழை பெய்துள்ளது. இதனால் ஆடிப்பட்டம் நாற்றங்கால் விதைப்பிற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. தொடர்ந்து மழை இல்லாததால் ஆவணியிலும் பெரிய அளவில் நடவு இல்லை. கிணறு வசதி உள்ளவர்கள் மட்டும் ஓரளவு நெல்சாகுபடியில் இறங்கினர். மற்றபடி பலரும் மழைக்காக விதைப்புக்கு தயார் நிலையில் உள்ளனர். நம்பிக்கையான சிலர் மட்டும் மழை பெய்யாத போதும் ஒரு மாதத்திற்கு முன்பாக வயல்களில் 'தொழி நாற்று' ஆக நேரடி விதைப்பு செய்தனர். அதிலும் சிலர் நாற்றங்காலில் விதை பாவினர் இளையாத்தங்குடி,திருக்களாப்பட்டி, பகுதியில் இப்படி பார்க்க முடிந்தது. பனையம்பட்டி, சம்பப்பட்டி, வாணியங்காடு அதிகமாக நேரடி விதைப்பும், நாற்றங்காலுக்கு குறைவாகவும் நடந்தது. ஆனால் மழையில்லாமல் பாதிக்கப்பட்டது. முளைக்காமலிருந்த விதைகள் தற்போது பெய்த மழையில் முளைக்கத் துவங்கியுள்ளது. அது போல, விவசாய தொழிலாளர்கள் நிறைந்த விவசாயம் நடைபெறும் பகுதியான சிந்தாமணிபட்டி,உதிரப்பட்டி, உத்தமசாலை, கண்ணமங்கலப்பட்டி பகுதிகளில் கண்மாயிலும் நீர் இல்லை. மழையும் பெய்யவில்லை. இதனால் 100 ஏக்கர் நிலங்களில் விவசாயப்பணிகளே துவக்கப்படவில்லை. உத்தமசாலை சின்னக்கருப்பன் கூறுகையில், மழை பெய்யவில்லை. அதனால் உழவுப்பணியும் இல்லை. மூணு வருடமாக நல்லா விளைஞ்சது. சாப்பாட்டுக்கு பயன்பட்டது. 3 வருஷத்திற்கு முன்பு பாதிவிளைச்சல் கிடைச்சது.இந்த ஆண்டு அதை விட மோசமா இருக்கு. விதை நெல் இருப்பு இருக்கிறது. இப்பவும் மழை பெஞ்சா உழுது விதைப்போம்.இல்லன்னா சாப்பாட்டுக்கு தான் பயன்படும். விவசாயம் இல்லாததால விறகு வெட்ட கூலி வேலைக்குத்தான் போய்ட்டு இருக்கிறோம்' என்றார் வருத்தமாக. கடந்த 2 மாதங்களில் நாற்றங்கால், விதைப்பு செய்த வயல்களில் கலெக்டர் உத்தரவின்படி தற்போது வேளாண்துறையினர் நாற்றங்கால்களை ஆய்வு செய்ய உள்ளனர். மழை இல்லாமல் முளைப்பு பாதிப்பு குறித்து சர்வே செய்து கணக்கிடுகின்றனர். இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை தற்போது மிகவும் தாமதமாக அக். மத்தியில் துவங்கியுள்ளது. சில நாட்களாக மழை பெய்யத் துவங்கியுள்ளது. விவசாயிகளுக்கு இந்த மழை சிறிதளவு நம்பிக்கையைத் தந்து விவசாயப் பணிகள் துவங்கினாலும் அண்மை ஆண்டுகளில் நடந்த 5 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல் சாகுபடி நடப்பது சந்தேகமாகவே உள்ளது. இதனால் 3 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நெல் விளைச்சல் குறையும் வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ