ரேஷன் கடை இல்லாத பரக்கினிப்பட்டி
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியத்தில் பல கி.மீ. அலைச்சல் இல்லாமல் மூன்று கிராம மக்கள் ரேஷன் பொருட்கள் எளிதாக வாங்க வசதியாக பரக்கினிப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.நெடுமரம் ஊராட்சியைச் சேர்ந்த உடையநாதபுரம் கிராமத்தினர் 3 கி.மீ. துாரத்திலுள்ள என்.புதுார் ரேஷன்கடைக்கும், கண்டவராயன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பரக்கினிப்பட்டி கிராமத்தினர் 2 கி.மீ. துாரத்திலுள்ள கண்டவராயன்பட்டி ரேஷன்கடைக்கும், கே.வைரவன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த மெய்யப்பட்டி கிராமத்தினர் 5 கி.மீ. துாரத்திலுள்ள கே.வைரவன்பட்டி ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.துாரத்தில் உள்ளதால் அனைவரும் பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். தினசரி வேலைக்கு செல்பவர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.இதைத் தவிர்க்க இந்த மூன்று கிராமங்களில் உள்ள 350 ரேஷன்கார்டு தாரர்கள் எளிதாக சென்று ரேஷன் பொருட்கள் வாங்க வசதியாக பரக்கினிப்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை துவக்க கோரியுள்ளனர்.