குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளம்; மூடப்படாததால் மக்களுக்கு பாதிப்பு
திருப்புவனம்; திருப்புவனம் புதுாரில் தெற்குப் பள்ளி அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாததால் மாணவ, மாணவியர் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். திருப்புவனம் பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 18 வார்டுகளிலும் 16 கோடி ரூபாய் செலவில் குழாய் பதிக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை ஒப்பந்தகாரர்கள் சரிவர மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் ஆங்காங்கே உருவான பள்ளங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பல இடங்களில் சோதனை ரீதியாக தண்ணீர் திறக்கப்பட்டு அதிக அழுத்தம் காரணமாக குழாய்கள் சேதமடைந்தும் பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதுகுறித்து பல முறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. திருப்புவனம் புதுார் தெற்கு பள்ளியில் 250 மாணவ, மாணவியர்கள் கல்வி பயில்கின்றனர். பள்ளி அருகே குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாததால் மாணவ, மாணவியர்கள் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர்.