பேரூராட்சியில் முறையாக துார்வாராத கழிவு நீர் கால்வாயால் மக்கள் அவதி
சிவகங்கை:நாட்டரசன்கோட்டை பேரூராட்சியில் குடியிருப்புகளில் உள்ள தெருக்களில் செல்லும் கழிவு நீர் கால்வாய் முறையாக துார்வாராததால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர். சிவகங்கை அருகே உள்ளது நாட்டரசன்கோட்டை பேரூராட்சி. இங்குள்ள 5 வது வார்டில் லால்பகதுார் சாஸ்திரி தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்லக்கூடிய கழிவு நீர் கால்வாய் முழுவதும் முறையாக துார்வாராமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து செல்லக்கூடிய கழிவு நீர் கால்வாயில் செல்வதில்லை. ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் கொசுத்தொல்லையில் இங்குள்ள குழந்தைகளுக்கு நோய் பரவுகிறது. அதேபோல் சிறிய மழை பெய்தாலே கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து ரோட்டில் ஓடுகிறது. தாழ்வான வீடுகளில் உள்ளே செல்கிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேரூராட்சியில் சேதம் அடைந்துள்ள கால்வாய்களை சரிசெய்தும் துார்வாராத கால்வாய்களை துார்வாரி முறையாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.