இருளில் மிதக்கும் காரைக்குடி சாலை எல்லை பிரச்னையால் மக்கள் தவிப்பு
காரைக்குடி: காரைக்குடியின் நுழைவு வாயிலான பழைய பஸ் ஸ்டாண்ட் கோவிலுார் ரோடு, இருளில் மிதப்பதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.காரைக்குடி நகரின் நுழைவு வாயிலாக கோவிலுார் ரோடு மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஏராளமானோர் ஆட்டோமொபைல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை, கார், பைக் ஷோரூம் அமைந்துள்ளன. கடைகள் மரங்கள் அதிகம் உள்ளதால் சாலையை அகலப்படுத்த முடியாத நிலை உள்ளது. சாலையின் இரு புறமும் மின்கம்பங்கள் மற்றும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தாலும் விளக்குகள் எரிவதில்லை.இரவில் வேலை விட்டு செல்லும் தொழிலாளர்களும், பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆட்டோ மொபைல் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன் கூறுகையில்:கோவிலுார் காரைக்குடி எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஊராட்சியில் கேட்டால் மாநகராட்சி ஆகிவிட்டது அங்கு சென்று கேளுங்கள் என்கின்றனர்.மாநகராட்சியில் கேட்டால் கலெக்டர் அலுவலகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளோம். பதில் வந்தவுடன் மின்விளக்கு சரி செய்யப்படும் என்கின்றனர். இரவு நேரங்களில் தொடர் விபத்து ஏற்படுகிறது. பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. புதிய சாலையான இச்சாலையில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.