பாலாற்றை துார் வாராத நிலையில் அடுத்து புயல் உருவானால் வெள்ளம் குறித்து மக்கள்அச்சம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் பாலாற்றை துார் வாராத நிலையில் அடுத்து புயல் உருவானால் வெள்ளத்தால் தாங்கமாட்டோம் என கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியில் உருவாகும் பாலாறு செந்துறை, திருச்சி மாவட்டம் தெத்துார், மதுரை மாவட்டம் பள்ளபட்டி வழியாக சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைகிறது.இதே போல் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உருவாகும் உப்பாறு பல்வேறு ஊர்களை கடந்து சிங்கம்புணரியில் பாலாற்றுடன் கலக்கிறது. இங்கிருந்து பாலாறு என்ற பெயரில் திருப்புத்தூர் பெரிய கண்மாய் வரை சென்று அங்கிருந்து விருசுழி ஆறு என்ற பெயரில் ராமநாதபுரம் மாவட்ட கடலில் கலக்கிறது. மாவட்ட எல்லையான மேலப்பட்டியில் இருந்து முறையூர் வரையினான ஆறு கடந்த சில ஆண்டுகளாக புதர், சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆற்றை ஆகிரமித்துள்ளது. கடந்த மாதம் இந்த ஆற்றில் சிறிய அளவில் வெள்ளம் வந்தபோது, தண்ணீர் கடைமடை வரை சென்று சேரவில்லை. இந்த ஆறுகளில் 2005ல் பெருவெள்ளம் வந்த போது மட்டிக்கரைப்பட்டி, காளாப்பூர் உள்ளிட்ட கிராமங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது.இந்நிலையில் தற்போது பருவமழை ஓய்ந்து மீண்டும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த முறை போல் இந்தாண்டும் உப்பாறு, பாலாறுகளில் வெள்ளம் வந்தால் புதர், சீமைக்கருவேல மரங்களால் கரையோர கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வெங்கடேஸ்வரன், மருதிப்பட்டி: இதற்கு முன் வந்த பெரு வெள்ளங்களின் போது ஆறுகள் துாய்மையாக, புதர் செடிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் அப்போதே பாதிப்பு அதிகம் இருந்தது. தற்போது புதர்கள், மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும் நிலையில் ஆற்றில் தண்ணீர் பெரிய அளவில் வந்தால் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும்.இதனால் கரையோர மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த மழை துவங்குவதற்கு முன்பாக ஆறுகளை சுத்தப்படுத்தி, மக்களின் அச்சத்தை போக்கவேண்டும்.