இலவச வேட்டி, சேலை கேட்டு ரேஷன் கடைக்கு அலையும் மக்கள்
தேவகோட்டை; தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கியது. தேவகோட்டை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் இரண்டு கடைகள் கூட்டுறவுத் துறை நிர்வாகத்தின் கீழும் மற்ற கடைகள் தமிழ்நாடு சிவில் சப்ளை நிர்வாகத்தில் செயல்படுகிறது.தேவகோட்டை நகரில் சிவில் சப்ளை கடைகளில் இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கூட்டுறவு துறை நிர்வாகத்தில் இயங்கும் ரேஷன் கடைகளான சுப்பிரமணியபுரம், அண்ணாசாலை கடைகள் இரண்டிலும் இன்னும் முழுவதும் வேட்டி சேலை வழங்க வில்லை. ஒரு மாதமாக வாங்காதவர்கள் ரேஷன் கடைக்கு அலைந்து வருகின்றனர். சிலருக்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாங்கியதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.இது குறித்து கூட்டுறவு துறை பணியாளர்களிடம் விசாரித்த போது: கிராமங்களில் உள்ள கடைகளுக்கு முழுவதும் வழங்கப்பட்டு விட்டதாகவும், தேவகோட்டை நகரில் மட்டும் இரண்டு கடைகளில் 20 சதவிகிதம் தான் வேட்டி சேலை வழங்கி இருப்பதாகவும், மீதி 80 சதவிகிதம் வேட்டி சேலை வரவேண்டும் என்றனர்.