குடிநீர், பஸ் வசதியில்லாத சலுப்பனோடை மக்கள்
சிவகங்கை; திருப்புவனம் ஒன்றியம், சலுப்பனோடை கிராம பள்ளிக்கு குடிநீர் வராததால் மாணவர்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சேத்தி கிராம ஊராட்சியின் கீழ் உள்ள சலுப்பனோடை கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி செயல்படுகிறது. இங்கு 60 மாணவர்கள் படிக்கின்றனர். கிராமங்களில் குழாய் அமைத்து வீடுகள் தோறும் வைகை குடிநீர் வினியோகம் செய்கின்றனர். ஆனால் இங்குள்ள பள்ளிக்கு வைகை குடிநீர் குழாய் இருந்தும் குடிநீர் வருவதில்லை. சலுப்பனோடை கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலை பள்ளிக்கு தினமும் சென்று வருகின்றனர். மாணவர்கள் பள்ளி சென்று வர காலை 8:30 மணி, மாலை 4:30 மணி ஆகிய நேரங்களில் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும். இந்த நேரங்களில் பஸ்கள் இல்லாததால், மாணவர்கள் 3 கி.மீ., நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர். தடையின்றி குடிநீர் வழங்கவும், மாணவர்களுக்கு பஸ் வசதி கோரி சலுப்பனோடை கிராம மக்கள் கலெக்டர் பொற்கொடியிடம் மனு அளித்தனர்.