பாதையை மறைக்காமல் போக்குவரத்திற்கு தீர்வு; போலீசாருக்கு மக்கள் கோரிக்கை
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் திருவிழா நேரத்தில் குடியிருப்புகளுக்கு செல்லும் ரோட்டை மறைக்காமல் போக்குவரத்தை சீர்செய்ய குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.இங்குள்ள சித்தர் முத்துவடுகநாதர் கோயில் சித்திரைத் திருவிழா இன்று நடைபெறுகிறது. சில ஆண்டுகளாகவே இத்திருவிழா நாளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காலை முதல் இரவு வரை வேங்கைப்பட்டி ரோட்டில் பேரிக்காடுகளை அமைத்து டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் அனுமதிப்பதில்லை. ஆனால் செல்வ விநாயகர் கோயில் வழியாகத்தான் நேதாஜி நகர், வடக்கு வேளாளர் தெரு, மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டும். வேறு பாதை இல்லை. ஆனால் டூவீலரை கூட போலீசார் விட மறுப்பதால் அப்பகுதி மக்கள் திருவிழா காலங்களில் சிரமப்படுகின்றனர். கடந்தாண்டு போலீசார் இப்பகுதிக்கு செல்லும் சாலையில் மூங்கில் மரம் வைத்து தடுத்ததால் அப்பகுதி மக்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பாதை திறந்து விடப்பட்டது. மருத்துவமனைக்குச் செல்பவர்கள் அவசர காலங்களில் சிகிச்சைக்கு செல்பவர்கள் வேறு வழியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இன்று நடைபெறும் சித்திரைத் திருவிழாவின் போது இப்பகுதி மக்கள் இடையூறு இல்லாமல் குடியிருப்புகளுக்கு சென்று வரவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், கூடுதல் போலீசார் நியமித்து பாதையை அடைக்காமல் போக்குவரத்தை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.