அனுமதி பெற்ற குவாரி பட்டியல்; பொது இடங்களில் வெளியிட மனு
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற குவாரிகள் குறித்த விபரங்களை பொதுமக்கள் பார்வையிடும்படி அரசு அலுவலகம், ஊராட்சிகளில் வெளியிட வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனுஅளித்தனர். சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் குவாரிக்குள் கல் உடைக்க வெடி வைப்பதற்காக குழி தோண்டியது போது, பாறை சரிந்து விழுந்தது. இதில், அங்கு வேலைபார்த்த 6 பேர் பலியாகினர். விசாரணையில் லைசென்ஸ் காலாவதியாகி 8 மாதங்களாக குவாரி செயல்பட்டு வந்தது தெரிந்தது. எனவே மாவட்ட அளவில் செயல்படும் அனைத்து கிரஷர், கிராவல் மண் குவாரிகளில், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று இயங்குபவை எத்தனை, எந்தெந்த விதிப்படி குவாரி இயங்க வேண்டும். மொத்த பரப்பளவு, சர்வே எண், கல்குவாரியின் பெயர், அரசுக்கு செலுத்திய தொகை, அனுமதி எண், தேதி, லைசென்ஸ் கால அவகாசம் உள்ளிட்ட விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரசு அலுவலகங்கள், குவாரிகள் முன்பாகவும், ஊராட்சி அலுவலகங்களின் முன்பாக விழிப்புணர்வு போர்டு வைக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரை வலைச்சேரிபட்டியை சேர்ந்த சரவணன் சிவகங்கை பொது குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்துள்ளார்.