உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரம் காளி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்

மடப்புரம் காளி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு நேற்று பாதயாத்திரையாக ஒரே நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்ததால்நெரிசல் ஏற்பட்டது.காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். விருதுநகர் மாவட்டம் வீரசோழன், மினாக்குளம்,ஆலங்குளம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மடப்புரம் காளி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்து செல்வது வழக்கம், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பறவை காவடி, வேல் குத்தி அக்னிசட்டி, பால்குடம் ஏந்தி வந்தனர்.பாதயாத்திரை குழு தலைவர் கருப்புச்சாமி கூறுகையில், விவசாயம் செழிக்க வேண்டியும் உடல்நலம் வேண்டியும் தை 2ம் தேதி பாதயாத்திரையாக கிளம்பி தை 3ம் தேதி மடப்புரம் காளி கோயிலுக்கு வருவது வழக்கம்.ஆரம்பத்தில் ஒருசிலர் மட்டுமே வந்த நிலையில் தற்போது ஏராளமானவர்கள் வருகை தந்துள்ளனர். வீரசோழன் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றில் பொருட்களை ஏற்றிகொண்டு பாதயாத்திரையாக வந்துள்ளோம், என்றார்.பாதயாத்திரையாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதாக வந்த தகவலையடுத்து கோயிலினுள் பக்தர்களை முறைப்படி வரிசையாக சென்று அம்மனை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து சென்றனர். கோயில் வாசலில் பறவை காவடி, அலகு குத்தி வந்தவர்கள் சாமியாட்டம் ஆடியதால் சற்று நெரிசல் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் மடப்புரம் ரோட்டில் பக்தர்கள் ஆடிப்பாடி, அலகு ஏந்தி வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.ஏனாதி, தேளி, கணக்கன்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திருப்புவனம், மதுரை செல்ல முயன்றவர்கள் பலரும் நெரிசலில் சிக்கி தவித்தனர். ஒருசில போலீசாரே பாதுகாப்பு பணியில் இருந்ததால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ