தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்று நடவு தொடர் பராமரிப்பு இல்லாததால் காய்ந்தது
திருப்புத்துார்: திருப்புத்துார் வழியாக செல்லும் திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது.திருப்புத்துார் நகருக்கு வெளியே புறவழிச்சாலை மற்றும் ஒன்றிய கிராமங்கள் வழியாக இந்த ரோடு செல்கிறது. முன்பு நெடுஞ்சாலைத்துறை ரோடாக இருந்த போது இருபுறமும் நிழல் தரும் மரங்கள் பரவலாக இருந்தன. தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட போது மரங்கள் வெட்டப்பட்டு ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் தேசியநெடுஞ்சாலையோரங்களில் மரம் வளர்க்க முடியவில்லை.ரோட்டோரத்தில் முன்னர் இரு முறை மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆனால் போதிய பராமரிப்பில்லாமல் மரக்கன்றுகள் முழுமையாக வளரவில்லை. தற்போது மழைக்காலம் என்பதால் மீண்டும் மரக்கன்றுகள் நடும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் துவங்கியுள்ளனர்.மரக்கன்றுகளை தொடர் பராமரிப்பு மேற்கொண்டு மரம் வளர நடவடிக்கை எடுக்க இப்பகுதி கிராமத்தினர் கோரியுள்ளனர்.