20 கி.மீ., விரட்டியது போலீஸ் அரிசி கடத்திய லாரி கவிழ்ந்தது
காரைக்குடி:ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை, 20 கி.மீ., துாரம் போலீசார் விரட்டியதால், கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி கவிழ்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வழியாக மினி லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்படுவதாக சிவகங்கை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், காரைக்குடி அருகே கல்லுார், கீழாநிலைக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீசாரை கண்டதும் மினி லாரி ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார், டூ - வீலரில் மினி லாரியை காரைக்குடி அருகே கருவியபட்டி வரை 20 கி.மீ., துாரத்திற்கு விரட்டினர். அந்த மினிலாரி அதிவேகத்தால், கருவியபட்டியில் திடீரென சாலையோரம் கவிழ்ந்தது. டிரைவர் அதிலிருந்து வெளியேறி தப்பி சென்றார். போலீசார் கிரேன் மூலம் மினி லாரியை மீட்டனர். அதில் இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.