அஜித்குமார் வக்கீலுக்கு போலீஸ் பாதுகாப்பு: கோர்ட் உத்தரவு
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் தனிப்படை போலீஸ் விசாரணையில் இறந்த கோயில் காவலாளி அஜித்குமார் வக்கீல் கார்த்திக்ராஜாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோர்ட் உத்தரவிட்டது. அஜித்குமாரை மானாமதுரை தனிப்படை போலீசார் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்க அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் ஜூன் 28ல் இறந்தார். இது தொடர்பாக போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.இவ்வழக்கில் முக்கிய சாட்சிகளான கோயில் ஊழியர் சக்தீஸ்வரன், அஜித் சகோதரரான நவீன்குமார், நண்பர் ஆட்டோ டிரைவர் அருண்குமார், சக காவலாளி பிரவீன்குமார் ஆகியோர் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு வழங்கவும் கோரி சிவகங்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அஜித்குமார் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா ஆக.12ல் தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க சிவகங்கை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி அறிவொளி, ''ரோந்து போலீசார் தினமும் அவரது வீட்டுக்கு சென்று கண்காணிக்க வேண்டும். சி.சி.டிவி., கேமராக்களை பொருத்த வேண்டும். வழக்கு தொடர்பான எதிரிகள் அவரை நேரில் சந்திக்க அனுமதிக்க கூடாது,'' என உத்தரவிட்டார்.