சிவகங்கை குற்றப்பிரிவில் போலீசார் பற்றாக்குறை
சிவகங்கை: சிவகங்கை குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. குற்றப்பிரிவு ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 எஸ்.ஐ., 6 சிறப்பு எஸ்.ஐ.,கள் உட்பட 17 போலீசார் பணி புரிகின்றனர். இதில் இன்ஸ்பெக்டர் அயல் பணியில் மதுரை உயர் நீதிமன்றத்தில் பணியில் நீண்ட நாட்களாக உள்ளார். எஸ்.ஐ.,க்கள் இரண்டு பேரும் கிரைம் டீமில் உள்ளனர். சிறப்பு எஸ்.ஐ., 7 போலீசார் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர். மற்றவர்கள் டி.எஸ்.பி., அலுவலகம், மருத்துவக் கல்லுாரி, எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பணியில் உள்ளனர். ஸ்டேஷனில் உள்ள 7 பேர் தான் இரவு ரோந்து உள்ளிட்ட ஸ்டேஷனுக்கு வரும் புகார்களை விசாரிக்க வேண்டும். நகர் பகுதியில் டூவீலர் திருட்டும், பஸ் ஸ்டாண்டில் அலைபேசி திருட்டு உட்பட பல திருட்டுக்கள் நடக்கிறது. எஸ்.பி., மாவட்ட தலைநகரில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் போதிய போலீசார் நியமனம் செய்து திருட்டுக்களை கட்டுபடுத்துவதோடு தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.