காரைக்குடியில் நலிவடைந்த குங்கும தொழில் மீண்டும் புத்துயிர் பெருமா என உற்பத்தியாளர் எதிர்பார்ப்பு
காரைக்குடி: காரைக்குடியில் நலிவடைந்து வரும் குங்கும தயாரிப்பு தொழிலை மீண்டும் புத்துயிர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். குங்குமம் மங்கலத்தின் அடையாளமாக மட்டுமின்றி, அழகு, ஆன்மிகத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது. குங்குமம் தான் பெண்களுக்கு தெய்வீக அம்சம்பெண்களின் நெற்றியில் வீற்றிருக்கும் குங்குமம் இந்திய நாட்டின் கலாசாரத்தின் அடையாளமாகும். எனவே தான், அறிவியல் வளர்ந்த இக்காலத்திலும். இல்லத்தரசிகளின் சென்டிமென்ட்டாக இன்றளவும் குங்குமம் நிலைத்திருக்கிறது. மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் குங்குமம் தயாரிக்கும் தொழில், காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. பெரிய அளவிலும் குடிசைத் தொழிலாகவும் நடந்து வந்த குங்குமம் தயாரிப்பு தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருந்தன. காரைக்குடி பகுதியில் தயாராகும் குங்குமம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மார்க்கெட்டிங் பிரச்னை மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை காரணமாக தொழில் நலிவடைந்து, ஒரு சில குங்கும தயாரிப்பு கம்பெனிகளே செயல்பட்டு வருகின்றன. குங்கும உற்பத்தியாளர்கள் கூறுகையில்: குங்குமத்தின் மூலப்பொருட்கள் மும்பையில் இருந்து வரவழைக்கப்படுகிறது. அந்தந்த பகுதிக்கு ஏற்ப, படிகாரம் பச்சரிசி சந்தனம் சுண்ணாம்பு எலுமிச்சை தேவையான மூலப்பொருட்கள் பயன்படுத்தி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. எங்களது நிறுவனம் 35 வருடங்களுக்கு முன்பு 5 பேருடன் தொடங்கப்பட்டது. பின்னர் 40 பேர் வரை வேலை செய்தனர். இங்கு தயாராகும் குங்குமம், அறந்தாங்கி பட்டுக்கோட்டை மதுரை புதுக்கோட்டை திருச்சி கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இத்தொழிலுக்கு மார்க்கெட்டிங் துறை பெரும் சவாலாகும். தவிர போதிய ஆட்களும் கிடைப்பதில்லை. ஆட்கள் கிடைக்காததால் குங்குமம் தயாரிப்பு தொழில் முற்றிலும் நலிவடைந்து விட்டது. இதனால் குங்குமம் தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. நலிவடைந்து வரும் குங்கும தொழிலை முன்னேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.