சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 100 சதவீத பணியிடங்களும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சந்தோஷம் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் பூமிராஜன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் குமார் கோரிக்கையை விளக்கி பேசினார். சுகாதார ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும். தொகுப்பூதிய சுகாதார ஆய்வாளர்களுக்கான தொகுப்பூதியத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.