உள்ளூர் செய்திகள்

கேள்விக்குறி

திருப்புவனம்: மாவட்டம் முழுவதும் போதிய தொழிற்சாலை இல்லாதது, இருக்கும் தொழிற்சாலைகளிலும் உள்ளுர் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்காதது உள்ளிட்டவற்றால் வேலை தேடி இளைஞர்கள் வெளியூர் செல்வதுடன் வாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் தடம் மாறி செல்கின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோயில், சிவகங்கை உள்ளிட்ட 12 தாலுகாக்களில் 14 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கில் கல்லுாரி படிப்பு முடித்து மாணவ, மாணவியர் வெளியேறி வருகின்றனர். ஆனால் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பெரும்பாலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். உள்ளூரில் வேலைவாய்ப்பே இல்லை. கடந்த ஐந்தாண்டுகளில் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை ஏதும் தொடங்கப்படவில்லை. தொடங்கப்பட்ட ஒருசில தொழிற்சாலைகளிலும் வேலைவாய்ப்பு உள்ளூர் இளைஞர்களுக்கு வழங்கப்படுவதில்லை. படித்த ஆண், பெண்கள் மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் கடைகள், நகை கடைகளில் வேலைக்கு செல்கின்றனர். வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் சிலர் தடம் மாறி சட்டவிரோத கும்பல்களுடன் இணைந்து எதிர்காலத்தை தொலைக்கின்றனர். திருப்புவனம் தாலுகாவில் 45 ஊராட்சிகளில் ஒரு லட்சம் பேர் வரை வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் வெளியேறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பே இல்லை. மதுரை மாவட்ட எல்லையை ஒட்டி இருப்பதால் சிலர் கஞ்சா கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைக்கின்றனர். சமீப காலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் பலரும் 20 வயதிற்குட்பட்டவர்கள் தான் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். இதனை மாற்ற மாவட்ட சமூக நலத்துறை எந்த வித நடவடிக்கையும் இல்லை. பள்ளி மாணவ, மாணவியர்கள் கூட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால் போலீசாரும் செய்வதறியாமல் திகைத்து எச்சரிக்கை செய்வதுடன் நிறுத்தி விடுகின்றனர். இதனால் பஸ் ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் பாதை தவறும் இளைஞர்களை கண்டறிந்து நல்வழிப்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ