சாக்கோட்டையில் மழையால் நிரம்பி வரும் கண்மாய்கள்
காரைக்குடி: சாக்கோட்டை வட்டாரத்தில் தொடர் மழையால் கண்மாய்கள் பல நிரம்பி வரும் நிலையில் கலுங்கு பராமரிப்பின்றி கிடப்பதால் மழைநீர் வீணாகி வருகிறது. காரைக்குடியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக 171 கண்மாய்கள் உள்ளன.சாக்கோட்டை யூனியனில் 308 கண்மாய்களும்,375 ஊருணிகளும் உள்ளன.சாக்கோட்டை வட்டாரத்தில் கண்மாய் மற்றும் ஊரணிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் வரத்துக் கால்வாய்களானது ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மாயமானதோடு கண்மாய்களின் கலுங்கு, மடை சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.மழைக்காலத்திற்கு முன்பு சேதமடைந்து கிடக்கும் கலுங்குகளை சரி செய்வதோடு வரத்து கால்வாய்களையும் மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். தற்போது பெய்து வரும் கனமழையால் சாக்கோட்டை வட்டாரத்தில் பல கண்மாய்களும் நிரம்பி உள்ளது. ஆனால் கருவேல மரங்களை அகற்றி மராமத்து செய்யாததாலும், கலுங்கு மடைகள் சேதமடைந்துள்ளதாலும் மழைநீர் வீணாவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில்: சாக்கோட்டை வட்டாரத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக உள்ளது. அதிக அளவில் மானாவாரி விவசாயமே நடைபெறுகிறது. நீராதாரமான கண்மாய்கள் பலவும் கருவேல மரங்கள் சூழ்ந்தும், மடைகள் பராமரிப்பின்றி உடைந்து காணப்படுகிறது. கண்மாய் துார்வாரப்படாததால் கனமழை பெய்தும் நீர் வீணாகிறது. வருங்காலங்களிலாவது கண்மாய்களை மராமத்து செய்வதோடு, மடைகளை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.