ரோட்டோர கருவேல மரங்களால் பார்வை இழப்பு அபாயம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியத்தில் முறையூரில் இருந்து அய்யாபட்டி செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன. இச்சாலையில் எதிரில் வாகனங்கள் வரும்போது டூவீலரில் செல்பவர்களின் முகத்தில் முள் குத்தி காயமடைவது தொடர்கிறது. பேருந்துகளில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருப்பவர்களும், ஆபத்தான முறையில் படியில் பயணம் மேற்கொள்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள், பயணிகளின் பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது மேலோட்டமாக முட்களை வெட்டினாலும் அவை மீண்டும் வளர்கின்றன. எனவே இருபுறமும் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்றி அவை மீண்டும் வளராமல் தடுக்க வேண்டும்.