உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராமங்களில் சாலைகள் அமைப்பு நிதி வழங்காததால் பணிகள் பாதிப்பு

கிராமங்களில் சாலைகள் அமைப்பு நிதி வழங்காததால் பணிகள் பாதிப்பு

இளையான்குடி : இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட ஒன்றியங்களில் பிரதமரின் கிராமச் சாலை திட்டத்தில் ரூ.30 கோடிக்கும் மேல் 4 மாதங்களாக வழங்காததால் ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து பணி செய்ய தயங்குகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட ஒன்றியங்களில் பிரதமர் கிராம சாலை திட்டத்தின் மூலம் தார் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் மத்திய அரசு நிதி 60 சதவீதமும், மாநில அரசு நிதி 40 சதவீதம் மூலமும் தார் சாலை இல்லாத கிராமங்களுக்கு 5 கி.மீ., வரை தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் இளையான்குடி,மானாமதுரை உள்ளிட்ட ஒன்றியங்களில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு 19க்கும் மேற்பட்ட தார் சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில் அதற்குரிய தொகையை இன்னும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதால் தொடர்ந்து பணி செய்ய தயங்குகின்றனர். ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் கிராம சாலை திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 மாதங்களுக்கு முன் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்ட வகையில் ரூ.30 கோடியை வழங்காமல் இருப்பதால் வட்டிக்கு வாங்கி முதலீடு செய்த நிலையில் வட்டி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம் என்றனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி கூறியதாவது: இத்திட்டத்திற்கான தொகையை வழங்குவதற்கான சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.அதனை சரி செய்யும் பணி முடிவடைந்த நிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் சார் நிலை கருவூலம் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ