திருப்புவனத்தில் ரோட்டோர சந்தை; போலீசார் நடவடிக்கை
திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று ரோட்டோரம் கடைகள் அமைக்க தடை விதித்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்பட்டது.திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை காலை பத்து மணி வரை கால்நடை சந்தையும் அதன் பின் காய்கறி சந்தையும் நடைபெறும், வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என 300க்கும் மேற்ப்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம், சந்தைக்கு என தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் பலரும் ரோட்டிலேயே காய்கறிகள், பழங்களை வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் விபத்தும் நிகழ்ந்து வருகிறது. பொருட்கள் வாங்க வருபவர்களும் ரோட்டிலேயே நிற்பதால் டூவீலர்கள் செல்ல கூட பாதை இருப்பதில்லை. ரோட்டில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால் பேருந்துகளும் நகருக்குள் வர மறுத்து பைபாஸ் ரோட்டிலேயே சென்று விடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்துதினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து நேற்றைய சந்தையில் அதிகாலை முதலே போலீசார் ரோட்டில் கடைகள் அமைப்பதை தடுத்ததுடன் சந்தைக்கு உரிய இடத்தில் சென்று வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தினர். மீறி கடைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதனால் வாகனப்போக்குவரத்து வழக்கம் போல சிரமமின்றி இருந்தது. தொலை தூர பஸ்களும் நகருக்குள் வந்து சென்றன. வரும் சந்தை நாட்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்கள் கூறுகையில்: வியாபாரிகள் சந்தைக்கு உரிய இடத்தில் கடை நடத்த வேண்டும், இதனை பேரூராட்சி நிர்வாகம் தான் கண்காணிக்க வேண்டும், பேரூராட்சி சார்பில்தான் கடைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும்எடுப்பதில்லை. வரும் காலங்களிலும்ரோட்டில் சந்தை அமைப்பதை தடுத்துநிறுத்த வேண்டும், என்றனர்