திருப்புத்துாரில் சந்தன மரம் வெட்டி கடத்தல்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே குறுவாடிபட்டியைச் சேர்ந்த விவசாயி பாண்டியன். இவரது நிலத்தில் நெல், வெட்டிவேர் பயிரிட்டு வருகிறார். இது தவிர, 18 ஆண்டுகளாக அனுமதி பெற்று, 30க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்க்கிறார். இவை நன்கு வளர்ந்துள்ளன.நேற்று முன்தினம் இரவு திருப்புத்துார் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பாண்டியன், குடும்பத்தினர் பண்ணை வீட்டில் தங்கினர். அதிகாலை இவரது தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 11 சந்தன மரங்களை வெட்டி கடத்தினர்.பாண்டியன் கூறியதாவது:மழைக்காலத்தில் தோட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில், சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளனர். கண்டவராயன்பட்டி போலீசில் புகார் செய்துள்ளேன். மாவட்ட வனத்துறை அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளேன். சந்தை மதிப்பு, 1 கிலோ சந்தன கட்டை, 32,000 ரூபாய் வரை விற்கிறது. எனக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.