அதிர்ச்சி
கிராமப்புறங்களில் நெல், கோதுமை, அரிசி, கேழ்வரகு உள்ளிட்டவைகளை அரைத்து தரும் அரவை மில்கள் ஏராளமாக இருந்தன. நவீன மார்டன் ரைஸ் மில்கள் வந்த பின் இவை ஒன்றன்பின் ஒன்றாக மாயமாகி விட்டன.விவசாயிகளும் அறுவடைக்கு பின் நெல் மூடைகளை மொத்தமாக மாடர்ன் ரைஸ் மில்களில் கொடுத்து அரைத்து அரிசியாக்கி கொண்டு வந்து பயன்படுத்த தொடங்கினர்.பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை உள்ளிட்டவைகளை மொத்தமாக அரைத்து மக்களுக்கு தேவைப்படும் அளவுகளில் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்து வந்தனர்.பாக்கெட் உணவு பொருட்கள் மீதான அதிருப்தி காரணமாக பொதுமக்கள் மீண்டும் அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை சொந்தமாக அரைத்து பயன்படுத்த தொடங்கினர்.திருப்புவனத்தில் 10க்கும் மேற்பட்ட மாவு மில்கள் கோதுமை, கேழ்வரகு, அரிசி, மிளகாய் பொடி உள்ளிட்டவைகளை அரைத்து தந்து வருகின்றன.ஒரு கிலோ அரிசி, கோதுமை, மிளகாய் உள்ளிட்டவை அரைப்பதற்கு கிலோவிற்கு இரண்டு ரூபாயில் இருந்து 25 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. மிளகாய், மல்லி 25 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும், பச்சரிசி, கோதுமை 10 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், கேழ்வரகு, சோளம், கம்பு, ஈர அரிசி உள்ளிட்டவை எட்டு ரூபாயில் இருந்து பத்து ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.பொதுமக்கள் மாதத்திற்கு ஒரு முறை ஐந்து கிலோ, பத்து கிலோ, என கோதுமை, அரிசியை அரைத்து மாவாக வைத்து கொள்வார்கள், அரைப்பதற்கான கூலி உயர்த்தப்பட்டதால் மாதந்தோறும் பட்ஜெட் தொகை உயர்ந்துள்ளது.பொது மக்கள் கூறுகையில்: மாதந்தோறும் கோதுமை, அரிசி, மிளகாய் பொடி உள்ளிட்டவைகள் அரைத்து வைத்து பயன்படுத்துவது வழக்கம், கூடுதலாக அரைத்தால் வண்டு வந்து மாவு கெட்டு விடும், இதனால் தேவைக்கு ஏற்ப அரைத்து பயன்படுத்தி வந்தோம், திடீரென கூலி உயர்த்தப்பட்டது அதிர்ச்சியடைய வைத்துள்ளது, இது கூடுதல் சுமையாக உள்ளது, என்றனர்.திருப்புவனம் ரைஸ்மில் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கண்ணன் கூறுகையில்: மின்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இரு மாதத்திற்கு ஒரு முறை 10ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்திய இடத்தில் தற்போது 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.இதுதவிர வேலையாட்கள் சம்பளம், பராமரிப்பு செலவு என அதிகரித்து விட்டதால் வேறு வழியின்றி கட்டணத்தை உயர்த்தியுள்ளோம், என்றனர்.