உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாலையை ஆக்கிரமித்து கடைகள்; போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு

சாலையை ஆக்கிரமித்து கடைகள்; போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடி, கண்டனுார், புதுவயல், மானாமதுரை, திருப்புவனம் உட்பட பல்வேறு நகர் பகுதிகளிலும் நெடுஞ்சாலையை ஒட்டி வாரச்சந்தை நடத்தப்படுகிறது. சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் தொடர் கதையாகி வருகிறது. காரைக்குடியில் கழனிவாசல் வியாழன் சந்தை, கணேசபுரம் திங்கள் சந்தை என இரு சந்தைகள் செயல்படுகிறது. காரைக்குடியின் மத்தியில் அமைந்துள்ள கழனிவாசல் வியாழன் சந்தைக்கு, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் வந்து செல்கின்றனர். தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் இங்கு கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். காரைக்குடியின் நுழைவு வாயிலாக உள்ள திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி, இச்சந்தை அமைந்துள்ளது. இட நெருக்கடியை குறைக்கும் பொருட்டும், வியாபாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையிலும் கழனிவாசல் சந்தையில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைகள் அமைக்கப்படுகிறது. தவிர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் சந்தைக்கு வரும் மக்கள் சாலையின் இரு புறமும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப் பிரச்னை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருகிறது. ஆனால் இதுவரை இப்பிரச்னை சரி செய்யப்படவில்லை. இதுகுறித்து குமார் கூறுகையில்: கழனிவாசல் சந்தை நடைபெறும் போது நெடுஞ்சாலையை கடைகள் ஆக்கிரமித்து கொள்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையை அகலப்படுத்தியும், புதிதாக சந்தை கட்டடம் கட்டியும் இதே நிலைதான் தொடர்கிறது. தவிர சந்தையின் அருகிலேயே மதுக்கடையும் செயல்படுகிறது. இதனால் சந்தையன்று தகராறும் நடைபெறுகிறது. சந்தை பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ