உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை: சிகிச்சை வழங்குவதில் பிரச்னை

மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை: சிகிச்சை வழங்குவதில் பிரச்னை

காரைக்குடியில் ரயில்வே பீடர் ரோடு, சூரக்குடி சாலை என இரு இடங்களில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. தற்போது ரயில்வே பீடர் ரோட்டிலுள்ள மருத்துவமனையில் காலை நேரத்தில் புற நோயாளிகள் பிரிவு மட்டும் செயல்படுகிறது.சூரக்குடி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.மாதந்தோறும் 300 முதல் 400 பிரசவம் நடக்கிறது. காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்கதையாக உள்ளது. செவிலியர்களும் போதிய அளவில் இல்லை.இங்குள்ள மருத்துவமனையில் நுாற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் 60 பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் 7க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது. சிலர் விடுப்பில் சென்றுள்ளனர். போதிய செவிலியர்கள் இன்றி சிகிச்சை வழங்குவதில் பிரச்னை நிலவுகிறது. உள் நோயாளிகள் பிரிவில் ஆண்களுக்கு சாதாரண நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 40 படுக்கைகளும், அறுவை சிகிச்சை செய்தவர்கள் தங்க 20 படுக்கைகளும் என இரு பிரிவுகள் உள்ளன.இரு பிரிவிற்கும் ஒரே செவிலியர் தான் இரவு நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். போதிய செவிலியர்கள் இல்லாததால், கூடுதல் பணி செய்ய வேண்டியுள்ளது. மேலும் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் சிலர் இரு படுக்கைகளை ஒன்றாக சேர்த்து படுப்பது, குடித்து விட்டு ரகளையில் ஈடுபடுவதால் செவிலியர்கள் இரவு நேரத்தில் பணி செய்வதற்கே அச்சப்படுகின்றனர்.சூரக்குடியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டுமென்றால் ரூ. 200 முதல் 300 வரை தேவைப்படுகிறது.காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு மருத்துவமனை செல்வதற்கு வட்ட பேருந்து இயக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில் :ஆண்கள் உள் நோயாளிகள் பிரிவு இரண்டிற்கும் தனித்தனி செவிலியர்கள் உள்ளனர். இதுவரை எந்த புகாரும் வரவில்லை. ஒரு சில செவிலியர் பணியிடமே காலியாக உள்ளது. சில செவிலியர்கள் விடுப்பில் சென்றுள்ளனர். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ