சிவகங்கை - திருப்புவனம்- விருதுநகர்அரசு பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தல்
சிவகங்கை: சிவகங்கையில் இருந்து திருப்புவனம் வழியாக விருதுநகருக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய பணப்பயிர் பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றிற்கான மார்க்கெட் அருப்புக்கோட்டை, விருதுநகரில் உள்ளன. இங்கு சென்றுவர விவசாயிகளுக்கு எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லை. சிவகங்கையில் இருந்து விருதுநகருக்கு திருப்புவனம், பழையனுார், வாகைக்குளம், நரிக்குடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை வழித்தடத்தில் புதிய பஸ்களை சிவகங்கையில் இருந்து இயக்க வேண்டும்.சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நிலக்கடலை, பருத்தி போன்றவற்றை விற்பனை செய்ய விருதுநகர் மாவட்டத்திற்கு செல்ல, மதுரை சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு பணம், கால விரயம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் சிவகங்கை மாணவர்கள் விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு வர சிவகங்கை - விருதுநகர் இடையே புதிய பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். * விவசாயிகள், மாணவர்கள் பாதிப்பு: என்.ராமகிருஷ்ணன், பிரான்குளம், திருப்புவனம் கூறியதாவது: சிவகங்கையில் இருந்து திருப்புவனம் வழியாக விருதுநகருக்கு புதிய பஸ்களை தொடர்ந்து இயக்க வேண்டும் என வலியுறுத்தி 6 முறை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். ஆனால், அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் இந்த வழித்தடத்தில் பஸ்களை இயக்குவதில் கவனம் காட்டுவதே இல்லை. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, சிவகங்கை - விருதுநகர் இடையே பஸ்களை இயக்க வேண்டும், என்றார். ///