குப்பை நிறைந்த சிவகங்கை கலெக்டர் அலுவலக கட்டடம்
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் மக்களை முதலில் குப்பை வரவேற்பதால், மக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984ம் ஆண்டு சிவகங்கையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் பிரிக்கப்பட்டது. அக்கால கட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகம் மற்றும் அனைத்து துறை அலுவலகத்திற்கு கட்டடங்கள் கட்டப்பட்டு 1985 ம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வந்தது. கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டி 40 ஆண்டிற்கு மேல் ஆன நிலையில் அனைத்து துறை அலுவலக கட்டடங்களும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கலெக்டர் அலுவலக கட்டடங்களின் முன்பகுதி மட்டுமே 'பளீச்' என காணப்படுகிறது. மற்ற துறை அலுவலக கட்டடங்கள் அனைத்தும் கூரை பெயர்ந்தும், பின் பகுதி சுவர் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது. சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கென புதிய கட்டடம் கட்ட ரூ.89 கோடி ஒதுக்கியுள்ளதாக ஜன., 22 அன்று சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், அறிவிப்போடு நின்றுவிட்டது. தற்போது வரை கலெக்டர் அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குப்பை வரவேற்கும் அலுவலகம் பழைய கட்டடங்களில் துறை அலுவலகங்கள் செயல்பட்டாலும், அவற்றை முறையாக பராமரித்தாலே ஓரளவிற்கு கலெக்டர் அலுவலகம் போல் தெரியும். ஆனால், மாவட்ட ஊராட்சி அலுவலக நுழைவு வாயிலில் (தரைத்தளம்) தடுப்பு கம்பிகள் துருப்பிடித்து உடைந்து கிடக்கின்றன. புள்ளியியல் துணை இயக்குனர் அலுவலகம் முதல் தளத்தில் உள்ளது. இந்த அலுவலகத்தில் சேகரமான குப்பை அகற்றாமல், அலுவலக நுழைவு வாயிலிலேயே கொட்டி வைத்துள்ளனர்.