காலியாக கிடக்கும் சிவகங்கை நகராட்சி
சிவகங்கை: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஊழியர்கள் காலியிடம் நிரப்பப்படாதால் அலுவலகமே காலியாக கிடக்கிறது. துாய்மை பணி உள்ளிட்ட நிர்வாகம் சார்ந்த பணிகள் அனைத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை நகராட்சியில் 2 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. இதில் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கிருந்த சுகாதார அலுவலர் பணி மாறுதலில் சென்றதால் அந்தப் பணியிடம் காலியாக உள்ளது . இதனால்நகராட்சியில் துாய்மை சார்ந்த பணிகளை ஆய்வு மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.அதே போல் வரி வசூல் செய்ய 5 வரி வசூலர் வேண்டும். இதில் 2 பேர் தான் பணியில் உள்ளனர். 3 பணியிடங்கள் காலியாக உள்ளது. வருவாய் ஆய்வாளர் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் பணி ஓய்வு பெற்றார். டவுன் பிளானிங் ஆய்வாளர் பணியும் காலியாக உள்ளது. நகராட்சி மேலாளர் பணியிடம் நீண்ட நாட்களாக காலியாக உள்ளது.இருக்கின்ற சில அலுவலக பணியாளர்களும் அடிக்கடி விடுப்பில் செல்கின்றனர்.நகராட்சியில் உள்ள அனைத்து நிர்வாக பணிகளும் தேக்கம் அடைந்துள்ளதால் பணிகள் பாதிக்கப்படுவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.