சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறை முகமை ரூ.15 கோடி பாக்கியால் பணிகளில் தேக்கம்
இளையான்குடி : சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமை சார்பில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைத்ததில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.15 கோடி வரை பாக்கி இருப்பதால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை முகமை மூலம் முதல்வர் கிராம சாலைகள் திட்டம், பிரதமர் கிராமச்சாலைகள் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.52க்கும் மேற்பட்ட பில்கள் மூலம் ரூ.15 கோடி வரை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதால் ஒப்பந்ததாரர்கள் பிற பணிகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை,இளையான்குடி, திருப்புவனம்,சிவகங்கை, திருப்புத்துார், சிங்கம்புணரி, தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில் உள்ள கிராம பகுதிகளில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல்வர் மற்றும் பாரதப் பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் மூலம் தார் ரோடு அமைக்கப்பட்டு அதற்கான பில்லை ஊரக வளர்ச்சித் துறை முகமைக்கு கொடுத்த பின்னும் இதுவரை ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.15 கோடி வரை இன்னும் வழங்கப்படாமல் உள்ளது.மேலும் பணிகளை எடுத்து செய்ய முடியாத நிலையில் திண்டாடி வருகிறோம். மாவட்ட கலெக்டர் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.