உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பால் பாதிப்பு : கண்காணிப்பு கேமரா இருந்தும் பயனில்லை

சிவகங்கை தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பால் பாதிப்பு : கண்காணிப்பு கேமரா இருந்தும் பயனில்லை

சிவகங்கை: சிவகங்கை தெப்பகுளத்தின் வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் தற்போது மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் கலந்து வருகிறது. சிவகங்கை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த தெப்பக்குளத்திற்கு மழை நீர் செல்ல வரத்து கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் கால்வாய்கள் அடைபட்டுள்ளன. தெப்பக்குளத்தின் வடக்கு பகுதியில் உள்ள வரத்து கால்வாயில் வணிக நிறுவனங்கள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தெப்பகுளத்தில் கலக்கிறது. இது தொடர்பாக 2024 ஜன.1ஆம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா,நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாளச்சாக்கடை செயல்பாட்டில் உள்ளதா என்பது குறித்தும் சிவகங்கை தெப்பகுளத்தில் கழிவு நீர் கலப்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நகராட்சி, சிவகங்கை கலெக்டர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் தொடர்ந்து தெப்பக்குளத்திற்கு வடக்குப்பகுதியில் வரும் வரத்துக்கால்வாயில் மீண்டும் கழிவு நீர் விடப்படுகிறது. இந்த கழிவு நீர் முழுவதும் தெப்பகுளத்தில் தான் கலக்கிறது. தெப்பகுளத்தின் கிழக்கு பகுதியில் குப்பையும் கொட்டப்பட்டு நீர் முழுவதும் குப்பை தேங்கியுள்ளது. அவ்வப்போது நகராட்சியினர் இதனை அகற்றினாலும் குப்பை கொட்டுவது குறையவில்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை இல்லை. தற்போது மழைக்காலம் என்பதால் கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் பெய்யக்கூடிய மழைநீர் இந்த வரத்துகால்வாயின் வழியாகத்தான் தெப்பகுளத்தில் கலக்கிறது. நகராட்சி நிர்வாகம் வரத்துக்கால்வாயில் கழிவு நீர் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை