சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் நில ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்ற எதிர்ப்பு
சிவகங்கை : சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 13 வீடுகளை ஹிந்து அறநிலையத்துறையினர் நேற்று அகற்றுவதாக அறிவித்தனர். இதை கண்டித்து நேற்று மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.சிவகங்கையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கவுரிவிநாயகர் கோயில் இடம் சர்வே எண் 341 ல் 13 வீடுகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இவற்றை அகற்றக்கோரி ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ஒவ்வொருவர் வீட்டிற்கும் நோட்டீஸ் அனுப்பினர்.கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள 13 வீடுகள் (செப்., 24)ல் அகற்றப்படும் என அறிவித்தனர். இதற்காக ஹிந்து அறநிலைய இணை கமிஷனர் பாரதி தலைமையில், செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் சிவகங்கை எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரோவிடம் மனு செய்தனர். அவர் சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார்.இந்நிலையில் சிவகங்கை நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், சிவகங்கை கவுரி விநாயகர் கோயில் நிலத்தில் உள்ள வீடுகளை அகற்றும் போது சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்படும். எனவே தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரும் சமரச கூட்டம் நடத்தி, தீர்வு பெற்று அதற்கு பின் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தெரிவித்து தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற போலீசார் பாதுகாப்பு தர முன்வராததால், ஹிந்து அறநிலையத்துறையினர் நேற்று நடப்பதாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை ஒத்தி வைத்தனர்.இந்நிலையில், காமராஜர் காலனியில் கட்டிய வீடுகளை அகற்றக்கூடாது என வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் சார்பில் நேற்று ரோடு மறியல் அறிவித்தனர். நேற்று ஆக்கிரமிப்பு அகற்ற ஹிந்து அறநிலையத்துறையினர் முன்வராமல் ஒத்தி வைத்தனர். இதனால் காமராஜர் காலனி அருகே கண்டன கோஷங்களை எழுப்பி விட்டு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.