சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக சிவகங்கை நகர் ஸ்டேஷன் தேர்வு
சிவகங்கை:மாவட்ட அளவில் சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக சிவகங்கை நகர் ஸ்டேஷனை தேர்வு செய்து, இன்று சென்னையில் நடக்கும் விழாவில், டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கடராமனிடம் விருது பெறுகின்றனர். தமிழக அளவில் அதிக குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அக்குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தருதல், வாரன்ட் நிலுவை வழக்குகளை முடித்து வைத்தல், தொடர்ந்து குற்றச்சம்பவங்கள் நிகழாமல் கண்காணித்தல் போன்று 26 விதமான செயல்களில் சிறந்து விளங்கும் ஸ்டேஷன்களை தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டது. 38 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு போலீஸ் ஸ்டேஷனும், கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள தலா ஒரு ஸ்டேஷன் என மாநில அளவில் 48 போலீஸ் ஸ்டேஷன்கள் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்களை இன்று சென்னைக்கு அழைத்து, டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கடராமனிடம் விருது பெற உள்ளனர். சிவகங்கை மாவட்ட அளவில் உள்ள 43 போலீஸ் ஸ்டேஷன்களை கள ஆய்வு செய்ததன் மூலம், சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக சிவகங்கை நகர் ஸ்டேஷனை சிறந்ததாக தேர்வு செய்துள்ளனர். சென்னையில் இன்று நடக்கும் விழாவில் விருதினை சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், டி.ஜி.பி.,யிடம் நேரடியாக பெற உள்ளார். சிறந்த ஸ்டேஷனாக தேர்வு பெற்ற சிவகங்கை நகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசாருக்கு எஸ்.பி., சிவபிரசாத், கூடுதல் எஸ்.பி.,க்கள் சுகுமாறன், பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமலஅட்வின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.